திரையுலகில் மனதில் பட்டதை பட்டென பேசும் குணம் கொண்டவர் நடிகை கங்கனா ரனாவத். இதனாலேயே அடிக்கடி செய்திகளில் இவரது பெயர் அடிபடுவதுண்டு.  அவ்வப்போது பாலிவுட் சினிமாவையும் விளாசி வருகிறார் கங்கனா ரனாவத். பாலிவுட் சினிமா சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பாலிவுட்டில் பார்ட்ஷியாலிட்டி இருப்பதாகவும் சாடி வருகிறார். 

இதனால் பிரபலங்கள் பலருடன் கங்கனாவுக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது முன் வைத்து வருகிறார் கங்கனா ரனாவத். இந்நிலையில் கங்கனா ரனாவத் இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்துள்ளார் கங்கனா.

இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவர்களின் கேரக்டர் போட்டோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. தலைவி படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

தலைவி படத்தின் ட்ரெயிலரை பார்த்ததுமே கங்கனா ரனாவத்தின் நடிப்பை பலரும் புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் கங்கனா ரனாவத், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'பாலிவுட் மிகவும் விரோதமானது, என்னைப் புகழ்வது கூட மக்களை சிக்கலில் சிக்க வைக்கும், அதனால்தான் அக்ஷய்குமார் போன்ற பெரிய நட்சத்திரங்கள் கூட தலைவி பட ட்ரெயிலரை பார்த்துவிட்டு என்னை ரகசியமாக பாராட்டியுள்ளனர்.

ஆனால் ஆலியா மற்றும் தீபிகா படங்களைப் போலல்லாமல் அவர்கள் வெளிப்படையாகப் பாராட்ட முடியாது அது. மூவி மாஃபியா பயங்கரவாதம்... ஒரு கலைத் தொழிலை கலையாக பார்க்க வேண்டும். சினிமாவுக்குள் வரும்போது அரசியலில் ஈடுபடக்கூடாது, எனது அரசியல் பார்வைகள் மற்றும் ஆன்மீகம் என்னை கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் இலக்காக மாற்றக்கூடாது, ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தால், நான் வெல்வேன் என பதிவிட்டுள்ளார்.