தமிழக பகுதிகளில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், “தமிழ்நாடு குப்பைத்தொட்டியா?” என்றும் பல்வேறு தரப்பினரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைகளில் அடிக்கடி கேரளா வாழ் மக்கள் சிலர் இரவோடு இரவாகக் கொட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த காலங்களில் தமிழக மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகே இருக்கும் தமிழக பகுதியில் இரட்டைமடை தோட்டம் என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமாக சுமார் 100 ஏக்கர் நிலம் இருக்கிறது. 

இவரது இந்த தோட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் பெரிய அளவிலான குழிக்குள் போட்டு மூடப்பட்டது வந்திருக்கின்றன. 

இந்த நிலையில், நேற்று இரவு அதிக அளவில் லாரிகள் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லைக்கு வந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சந்தேகமடைந்து ரோந்து சென்றிருக்கிறார்கள். 

அப்போது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான அவரது தோட்டத்தில், 3 டிப்பர் லாரி மூலம் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவு, நகராட்சிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு அந்த பகுதியில் கொட்டப்பட்டுக்கொண்டு இருந்தன. 

இதனைப் பார்த்த அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்து அந்த 3 டிப்பர் லாரிகளையும், குழிதோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் அங்கேயே சிறைபிடித்தனர். 

அத்துடன், அந்த லாரிகளின் ஓட்டுநர் உள்பட 10 பேர், அங்கிருந்து கீழே குதித்து தப்பி ஓடி உள்ளனர். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வருவாய்த் துறை அலுவலர்களுக்கும், ஆனைமலை காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

இதரனையடுத்து, அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவை கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் என்பதனை உறுதி செய்தனர். 

இதனையடுத்து, அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அந்த லாரிகளை பறிமுதல் செய்து உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இணையத்தில் பலரும் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.