மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நாளை (ஏப்ரல் 9) வெளியாகவுள்ளது கர்ணன். ஆனால், தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதில் திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், கர்ணன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி கர்ணன் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாணு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சொன்னபடி நாளை கர்ணன் திரையரங்குகளில் வெளியாகும். அரசின் விதிப்படி 50 சதவீத இருக்கைகள் நிரப்பப்பட்டு, முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளில் திரையிடப்படும். கர்ணன் திரைப்படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்ணன் நாளை வெளியாவதால் தனுஷின் புதுச்சேரி ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று கர்ணன் கட் அவுட்டை வைத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.