விதவை பெண் உட்பட மொத்தம் 9 பெண்களை திருமணம் செய்த நபர், தனது மனைவிகள் அனைவரையும் விபச்சாரத்தில் தள்ளி கொடூமை படுத்திய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்தவர் அருண் குமார் என்ற நபர், அந்த பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார்.

இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற இளம் பெண்ணை காதலித்து உள்ளார். பின்னர், திட்டமிட்டு அவரையே திருமணம் செய்து உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். 

அதே நேரத்தில், திருமணத்திற்கு பிறகுத் தனது காதல் மனைவியை பாலியல் ரீதியாக தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது. 

இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. அதே நேரத்தில், கணவன் அருண் குமார், வேறு பல பெண்களுடன் பழகிக் கொண்டு இருந்திருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்களில் சிலரைத் தனது மனைவி கீதாஞ்சலிக்கு தெரியாமல் அடுத்தடுத்து அருண் குமார் திருமணமும் செய்துகொண்டு உள்ளார். 

அத்துடன், அந்த பெண்களை எல்லாம் தனித்தனியாக வீடு பார்த்து வைத்து, அவர்களுடன் தனித் தனியாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் அருண் குமார்.

அதே நேரத்தில், அருண் குமாருக்கு பணத்தின் தேவைகள் அதிகமாக இருந்து உள்ளது. இதனால், தான் திருமணம் செய்து குடும்பம் நடத்திய வந்த தனது எல்லா மனைவிகளையும் அந்த பகுதியில் அப்படியே விபச்சாரத்தில் தள்ளிக் கொடுமைப்படுத்தத் தொடங்கி உள்ளார். 

இதற்காகவே, அவர் தனியாக புரோக்கர்களை தேடிப் பிடித்து அவர்களிடம் தனது மனைவிகளை விற்று உள்ளார். கணவன் அருண் குமாரின் இந்த இன்னொரு முகம் பற்றி, முதல் மனைவி கீதாஞ்சலிக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த கீதாஞ்சலி, இது தொடர்பாக ரகசியமாகக் களத்தில் இறங்கி அவரே விசாரித்து உள்ளார்.

அப்போது, லட்சுமி என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவரை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளக் கணவன் அருண் குமார், முயன்று கொண்டிருப்பது தெரிய வந்தது. அத்துடன், இந்த லட்சுமி ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கணவனை இழந்து விதவையாக இருந்து வந்த நிலையில், அவரின் மனதை மாற்றி அவரை எப்படியோ அருண் குமார் திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது.

இப்படியான தகவல்களை எல்லாம் கடும் அதிர்ச்சியடைந்த முதல் மனைவி கீதாஞ்சலி, இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாத என்று முடிவுக்கு வந்து, கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி திஷா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனது கணவன் மீது புகார் அளித்து உள்ளார். 

ஆனால், போலீசார் இது தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, முதல் மனைவி கீதாஞ்சலியும், 

லட்சுமியும் சேர்ந்து ஆந்திரா மகளிர் ஆணையத்தை நாடி உள்ளனர். அங்கு, தங்களுக்கு நடந்ததை எல்லாம் எடுத்துக்கூறி, புகாராக அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக மகளிர் ஆணையம் இந்த புகாரைக் கையில் எடுத்து விசாரணை நடத்தியது. அத்துடன், இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பாதிக்கப்பட்ட மனைவிகளான கீதாஞ்சலியும், லட்சுமியும் கணவன் அருண் குமார் பற்றி,  பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை புட்டு புட்டு வைத்து உள்ளனர். 

குறிப்பாக, “இது வரை கணவன் அருண் குமார் மொத்தம் 9 பெண்களைக் கல்யாணங்கள் செய்து உள்ளார்” என்றும், கூறி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

“கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் அருண் குமார், அவர்களில் சிலரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்து உள்ளார் என்றும், கல்யாணம் ஆகாத சில பெண்களை பல்வேறு பகுதிகளில் உள்ள விபச்சார கும்பலிடம் அவர் விற்று உள்ளார்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர். 

அத்துடன், “பிடிக்காத பல பெண்களை அருண் குமார் அடித்துத் துன்புறுத்தி வந்து உள்ளார்” என்றும், மனைவிகள் இருவரும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

மிக முக்கியமாக, “விதவை பெண் லட்சுமியின் கணவரை கொன்றதே அருண் குமார் தான்” என்றும், லட்சுமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“கொலை செய்யப்பட்ட லட்சுமியின் கணவனின் பெயர் ராமு என்பதும், அருணின் நண்பருடன் கூட லட்சுமி மீதுள்ள ஆசையால், ராமுவை கொன்று விட்டு, தன்னுடன் வசிக்குமாறும், விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் லட்சுமிக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார்” என்ற தகவலையும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “அருண் குமார், ஒரு கஞ்சா பேர்வழி என்றும், பல கஞ்சா கேஸ்கள் பல ஸ்டேஷனில் புகாராக அவர் மீது உள்ளது என்றும்” அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஆந்திர போலீசார், அருண் குமார் மீது கொலை, கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.