1972ம் ஆண்டு வெளியான கனிமுத்துப்பாப்பா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி. முத்துராமன். ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கியவர் முத்துராமன். கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குனரான அவருக்கு நேற்று 86வது பிறந்தநாளாகும். இயக்குனர் முத்துராமனுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து இவர் படங்களை இயக்கி உள்ளார். பிறந்தநாள் அன்று அவர் சென்னையில் இருக்கும் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்கள் கோவிட் 19 அறிகுறிகளுடன் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோவிட் நிமோனியா இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் தற்போது மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். 

அவரின் நிலைமை தற்போது சீராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

86 வயதில் அவர் கொரோனாவை வென்று நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். முத்துராமன் மருத்துவமனையில் இருப்பதால் ரஜினி கவலையில் இருப்பாரே என்கிறார்கள் ரசிகர்கள்.