கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவை என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதனை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் என்பது தினசரி எண்ணிக்கையில் தற்போது 4000 யை நெருங்கி வருகிறது. சென்னையில் மட்டும் நாள்தோறும் 1500 என்கிற அளவில் பாதிப்பு எண்ணிக்கை இருக்கிறது.

இப்படியான நிலையில் தான், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது.

அதன் படி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதில், 

-கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

- வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ பாஸ் அவசியம்.

- புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். 

- மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி. 

- தமிழகத்தில் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

- மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. 

- சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இயங்கவும் தடை.

- தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

- தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

- ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

- திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.

- இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.

- தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

- நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி உண்டு.

- ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

- அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி. 

- கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள் மட்டும் செயல்பட தடை.

- 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

- நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.

- நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி.

- சினிம சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 

- சினிம சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர் ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்.

- வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.