உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. 

இந்த வைரஸுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், பெரிய அச்சுறுத்தலை இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறபிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். பின்னர், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாகிறாவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தமன்னா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, விஷால், ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், உள்பட பலருக்கும் பாதித்தது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். கடந்த சில நாட்களாகத் தன்னைத் தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரைத் துறை சார்ந்தவர்கள் அவரது பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். 

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஜே.எஸ்.கே சதீஷ். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், அக்ஷரா ஹாசன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி நடித்திருக்கும் யாருக்கும் அஞ்சேல் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஜே.எஸ்.கே. சதீஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாகவும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.