கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் மாஸ்டர். 

ரசிகர்களின் மனதிலும், வசூலிலும் சாதனைகள் படைத்து வெற்றி வாகை சூடியது இப்படம். இந்த படத்தில் கல்லூரி பேராசியராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட JD எனும் பேராசிரியர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க வருகிறார். முதலில் ஜாலியாக இருந்தாலும், அதன் பின் அங்கு நடக்கும் சம்பவங்களை உணர்ந்து வில்லன்களுக்கு பாடம் கற்றுத்தருவதே இந்த மாஸ்டர் படத்தின் கதைக்கரு. 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து உலகம் முழுக்க மாஸ்டர் புகழ் பாடியது. 

அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசன் வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் ப்ரோமோ காட்சி வெளியாகி பட்டையை கிளப்பியது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை செய்திகளில் காண முடிகிறது. திரைப்பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா. சமீபத்தில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.