தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான இறுதிநாளான நாளான இன்று அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டனர். 

இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள, தேர்தல் ஆணையம் 7 மணி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பது,’’ தேர்தல் ஆணையம் அனுமதியித்து இருக்கும் நேரத்தை தாண்டி, வாக்குபதிவு நாள் முடியும் வரை அனைத்து அரசியல் கட்சியினரும், தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது. தேர்தல் விவகாரத்தை, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். வானொலி, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் முன்னெடுக்க கூடாது.

இதை மீறும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவைத் தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது

புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க இருப்பதால், இந்த விதிமுறைகள் புதுச்சேரிக்குப் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.