இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. இன்று தொடர்ந்து 24-வது நாளாக பாதிப்பு அதிகரித்தது உள்ளது. இன்று புதிதாக 89,129 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில், கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தைத் தாண்டியது. 24 மணி நேரத்தில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள் தான் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதாக மத்திய அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்தியாவின் மொத்த பாதிப்பில் சுமார் 81 சதவிகிதம் இந்த 8 மாநிலங்களிலிருந்து தான் கண்டறியப்பட்டுள்ளன. 
நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை இந்த மாதம் மத்தியில் உச்சத்தைத் தொட்டு மே மாத இறுதி வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


 இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்ட குழுவை சார்ந்த முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுள்ளது. மீண்டும் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.


மேலும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனையை அதிகரிக்கவும், தொற்று பதிப்பு அதிகம் உள்ள இடங்களைத் தனிமைப்படுத்தவும் வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் வலியுறுத்தியுள்ளது.