20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ள இந்தியா, முக்கிய போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து இன்று களம் காண்பது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உளளது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 ல் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது, இது வரை இல்லாத வகையில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. 

முக்கியமாக, பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2 வது லீக்கில் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 110 ரன்னில் அப்படியே சுருண்டு போனதுடன், ஒரு மாபெரும் தோல்வியையும் சந்தித்தது. 

இப்படியாக, அடுத்தடுத்து இரு படுதோல்விகளினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கிட்டதட்ட மங்கிப்போய் உள்ளது. இதனால், இனி வரும் போட்டிகளில் மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமைக்கு இந்திய அணி தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது.

இப்படியான சூழலில் தான், இந்தியா தனது 3 வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

இன்றைய போட்டியில், கட்டாயம் வெற்றி பெறுவதோடு ரன்ரேட்டை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் ஆட்டம் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன், இன்றைய போட்டியில் இந்தியா தோற்கும் பட்ஜத்தில், அரை இறுதி வாய்ப்பு முழுமையாக கைவிட்டு போகும் நிலை இருக்கிறது. 

இந்த சூழலில் தான், சற்றும் குறைத்து மதிப்பிட முடியாத ஆப்கானிஸ்தான் அணியை, அதுவும் முன் எப்போதும் இல்லாத வகையில் நல்ல ஃபாமில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியை, தற்போது ஃபாமில் இல்லாத இந்தியா வீழ்த்த வேண்டுமென்றால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் “பாமுக்கு திரும்ப வேண்டிய அவசயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும், அரை இறுதிக்கு முன்னேற இந்தியாவுக்கு மிகவும் குறைந்த வாய்ப்புகளே இருக்கும் நிலையில் தான் இன்றைய போட்டிகள் நடைபெறுகிறது. 

குறிப்பாக, இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் மற்றும் மத்திய வரிசை ஆகிய இரண்டுமே ஃபாம் இல்லாதது போல் இருக்கிறது. 

முக்கியமாக, கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் மட்டுமே ஆறுதலை அளிக்கும் வகையில் உள்ளது. 

அதே போல் எப்போதும் மிரட்டலான, நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரோகித், ராகுல், பந்த், பாண்ட்யா உள்ளிட்டோரும் அதிரடி காட்டத் தெரியாதவ்கள் போலவே, கடந்த இரு போட்டிகளிலும் திணறி வருகின்றனர். 

அதே போல், பந்து வீச்சிலும் பும்ராவைத் தவிர மற்ற வீரர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் பந்துவீச்சின் போது பவர் பிளேவில் முஜிபுர் ரகுமான், முகமது நபி ஜோடியும், மிடில் ஓவர்களில் ரஷித் கானும் எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

நவீன் உல் ஹக்கின் துல்லிய யார்க்கர்களும், ஹமித் ஹசன், குல்புதீன் நைப் ஆகியோரின் விவேகமான பந்து வீச்சும் கூடுதல் பலமாக அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

முக்கியமாக, மன ரீதியாகவும் தொய்வு அடைந்துள்ள இந்திய அணி, சர்வதேச போட்டிகளில் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்று மீட்சி பெறுமா என்பதை ரசிர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்று நடைபெறும் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியானது, மிகுந்த சவாலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.