தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ, கேங் லீடர், ஜெர்ஸி உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழிலும் பலரது கவனத்தை ஈர்த்தது.

சமீபத்தில் நடந்துமுடிந்த 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் நானியின் ஜெர்ஸி திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நானி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஷியாம் சிங்கா ராய்.

நிஹாரிகா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் ஷ்யாம் சிங்கார ராய் மற்றும் வாசு என இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்க, சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், நவீன் நூலின் படத்தொகுப்பு செய்துள்ள ஷியாம் சிங்கா ராய் படத்திற்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ளார். டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் அதிரடியான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.