கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் , ‘முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் டாக்டர் ஜோசப் போட்ட ரிட்  மனுவின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் படியே தண்ணீர் திறக்கப்பட்டதாகவும், 29-ம் தேதி நீர்வள அலுவலர்களால் அணை திறக்கப்பட்டது என்றும், முன்னெச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு அறிவித்ததாகவும்,  எதிர்பாராத விதமாக கேரள அமைச்சர்கள் வந்திருந்ததாகவும்’ கூறினார்.

மேலும், 138 அடி தான் நீர் இருக்க வேண்டும், 29-ம் தேதி 138.75 அடியாக நீர் இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது எனவும் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

p1

பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லை பெரியாரறு அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என கேரளா கோரிக்கை விடுத்துள்ள நிலையில், முல்லை பெரியார் அணை திடமாக உள்ளதாக கூறிய அவர்,  தமிழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், பழைமை நிலைவாதிகளுக்கு இது தெரியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியாறு அணையில் உள்ள பேபி அணையின் கீழ் மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதியின் அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டார். 

d3

மேலும் மரம் வெட்ட அனுமதி அளித்தது தொடர்பாக தனக்கு தெரியாது என கேரள அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையில் நாங்கள் தலையிடுவது நாகரீகம் அல்ல எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சில நேரங்களில் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் மாறி விடுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மழை வெள்ளங்களை காலை முதல் மாலை வரை நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர், தமிழக முதல்வர் மட்டுமே என கூறிய அவர், 
முதலமைச்சரான பிறகும் உழைப்பு, உழைப்பு என மு.க.ஸ்டாலின் உழைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் பாராட்டினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து அரசியல் விளம்பரத்திற்காக அதிமுக பேசி வருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.