தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவின்  முதல்வர் வேட்பாளர்  எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சாராகியிருந்தாலும் இம்முறை முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி களமிறங்குவதால் எடப்பாடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, அவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தை ”நான் ஒரு விவசாயி” என்பது தான். 

உண்மையில் பழனிசாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான். 66வயதாகும் பழனிச்சாமி, பிஎஸ்சி வரை படித்துள்ளார். 1972ம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கே.பழனிச்சாமியின் மனைவி பெயர் ராதா. இவர்களுக்கு மிதுன் குமார் என்ற ஒரு மகன் உள்ளார். 

கோவை மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கருப்பக் கவுண்டர் - தவசியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி, கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு வெல்ல மூட்டை வியாபாரம் செய்து வந்தார். 

எம்.ஜி.ஆரின் மீதிருந்த பேரார்வம், எம்.ஜி.ஆரின் அரசியலின் மீதும் திரும்பியது. இதனால் அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அதிமுகவில் பல பொறுப்புகளை வகித்த அவர் எடப்பாடி தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளார்.

ஜெயலலிதாவின் நேரடி விசுவாசத்துக்குரிய தொண்டர்களில் எடப்பாடியும் ஒருவர் என்பதால் இவருக்கு தேர்தலில் போட்டியிட அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. 1991 முதல் 1996 வரை எடப்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்தார். 

1998ஆம் ஆண்டு திருச்செங்கோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இதில் 2011ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் சசிகலாவிற்கு கிடைத்த சிறை தண்டனை எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தது. 2017, பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தமிழத்தின் 13ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, நான்காண்டுகள் முதல்வராக வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். 

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக கட்சி, அவரது மறைவுக்குப் பிறகு உடையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கட்சி யாருக்கு, கழகம் யாருக்கு, சின்னம் யாருக்கு என்று பல நெருக்கடிகள் எடப்பாடியை சூழந்து இருந்தது. 

மறுபக்கம் தினகரகன், தீபாவின் தரப்பு நெருக்கடிகள் கொடுத்தன. ஆனால், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து கட்சிக்காரர்களை அரவணைத்து கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்து இந்த 2021 சட்டசபைத் தேர்தலை எதிர்க்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.