தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது திரை பயணத்தில் 43 வருடங்களை கடந்து இன்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்தடுத்து வரிசையாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

முன்னதாக முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்து மெகா ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் ஆகிய திரைப்படங்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

இதனையடுத்து தமிழில் தல அஜித் குமார் நடித்து வெளிவந்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகிறது போலா ஷங்கர். எகே என்டர்டெயின்மென்ட் மற்றும் கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் இணைந்து தயாரிக்கும் போலா ஷங்கர் திரைப்படத்தை இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

போலா ஷங்கர் திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 11ம் தேதி போலா ஷங்கர் திரைப்படத்தின் பூஜையும் நவம்பர் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.