“ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே வருகிறார்” என்று, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ள சம்பவம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருப்பது தான், தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அனல் வீச காரணமாக இருக்கிறது.

இதனால், அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து, இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் பாவனை செய்து வரும் சம்பவங்கள் தற்போது ஒவ்வொன்றாக பார்க்க முடிகிறது.

இந்த விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்” என்றும், கடுமையாக விமர்சனம் செய்த அதே நேரத்தில், இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், இபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் தரப்பினர் மீது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது, தற்போது காவல் நிலையம் வரை சென்று நேற்றைய தினம் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருப்பது, அதிமுகவில் இன்னும் பரபரப்பை பற்ற வைத்து உள்ளது. 

இந்த நிலையில் தான், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடர்பாக முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த முறையீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு ஒன்றும், தேர்தல் ஆணையத்தில் தற்போது அளிக்கப்பட்டு உள்ளது. 

அந்த பதில் மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை” என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “ஓ.பன்னீர் செல்வம் அவ்வப்போது, தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றி வருகிறார் என்றும், பொதுக் குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என்று, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்” என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“அதிமுகவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும்” எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்டு உள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், “அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக் குழு கூட்டுவதற்கு உள்ள அதிகாரிகள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆனதற்கான சட்ட விதிகளை குறிப்பிட்டும் பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்” என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.