அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆரால் எழுதப்பட்ட அவரது உயிலில் “அதிமுக ஒற்றை தலைமை” குறித்து சொல்லப்பட்ட ரகசியமும், தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டு அரசியல் அதிமுகவால் பெரும் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி, ஒரு பரபரப்பான சூழழுக்கு மத்தியில் தான், இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் காலையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்” என்று மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதே நேரத்தில், இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் இன்றைய தினம் கிழிக்கப்பட்ட சம்பவமும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஏற்கனவே சசிகலா நீக்கம், டிடிவி தினகரன் பிரிவால் 2 ஆக உடைந்து நிற்கும் அதிமுக தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் காரணமாக, மேலும் 2 பிரிவுகளாக பிளவுப்பட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

எனினும், அதிமுகவை முழுமையாக ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட தன்னுடைய எல்லா ப்ளான்களையும் செயல்படுத்தி கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் பதவியை கிட்டதட்ட நெருங்கி வந்துவிட்டார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ, தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணம் இருக்கும் நிலையில், தொடர்ந்து முட்டுக்கட்டடை போடவும் முயன்று வருகிறார்.

இதனால், அதிமுகவின் பொதுக்குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், முதல் வேலையாக டெல்லிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தின் போது, “அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர்” என்றும், சூளுரைத்து வருகிறார்.

அதே நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி நடத்திய தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு நேரடி போட்டியாக, நாளைய தினம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

என்றாலும், தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு 80 சதவீத மாவட்டச் செயலாளர்கள் துணையாக இருப்பதால், வரும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக் குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி நிச்சயம் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும், அதிமுகவில் வெளிப்படையாகவே பலரும் பேசி வருகின்றனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழழுக்கு மத்தியில் தான், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய பதிவை வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில், அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் உயிலை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள கே.சி. பழனிசாமி, “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 18.01.1987அன்றைய தேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் அதிமுக கட்சியை வழி நடத்த வேண்டும் என்று, தன்னுடைய உயிலில் குறிப்பிட்டு உள்ளார்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர் தொண்டர்களால் ஒரு தலைமையை தேர்ந்தெடுப்போம் என்றும், நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகளும், அடிமைகளும், ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்” என்றும், கே.சி. பழனிசாமி கூறியுள்ளார்.

குறிப்பாக, எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போது கடந்த 28.4.1986 ஆம் ஆண்டில் ஒரு உயில் எழுதினார் என்றும், அதன் பிறகு அந்த உயிரைல ரத்து செய்து விட்டு கடந்த 18.1.1987 ஆம் ஆண்டில் 2 வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவர் புதிய உயில் எழுதி வைத்தார் என்றும், கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, எம்.ஜி.ஆர். உயிரிழந்த பிறகு கடந்த 9. 1.1988 அன்றைய தினம் இந்த உயில் வெளியிடப்பட்டதாகவும் செய்திகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.