நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்காக அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகிவரும் திரைப்படத்தில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ள, சூர்யா தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆஸ்கார் அகாடமியின் தேர்வு குழுவில் இணையும் புதிய உறுப்பினராக சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் அகாடமியின் தேர்வு குழுவில் இருக்கும் நிலையில் தற்போது அவருடன் சூர்யாவும் இணைந்துள்ளார். தென்னிந்தியா நடிகர்களிலேயே முதல் நடிகராக சூர்யாவிற்கு ஆஸ்கார் அகாடமியில் இருந்து தேர்வு குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சூர்யாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சூர்யாவை பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “சகோதரர் சூர்யா நட்சத்திரங்களின் பாதையில் நடப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஈர்ப்புவிசையால் இறக்கைகள் வலுவிழக்கும். நாம் தேவதைகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்கினோம். சிறந்தவர்களின் கூட்டத்தில் இணைவதை கண்டு சகோதரனாக பெருமையடைகிறேன்.” என பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் அந்த பதிவு இதோ…
 

Glad my brother @Suriya_offl treads the ground of stars. In spite of gravity, which makes wings weak. We created angels and stars. Hence be proud brother to join the crowd of excellence.

— Kamal Haasan (@ikamalhaasan) June 29, 2022