“நீ என்ன ஜெயக்குமார் ஆளா?” என்று கேட்டுக்கொண்டே, சக அதிமுக தொண்டர் வாயில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவர் குத்தியதால், பெரும்  பரபரப்பும் ஏற்பட்ட நிலையில், சம்மந்தப்பட்டவர் மீது காவல் நிலையத்தில் வழக்கும் பாய்ந்து உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருப்பது தான், தமிழ்நாட்டு அரசியல் பெரும் பரபரப்பாகி இருக்கிறது.

இந்த விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நேற்றுக்கூட செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்” என்றும், கடுமையாக விமர்சனம் செய்த அதே நேரத்தில், இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படியாக, அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து, இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் பாவனை செய்து வரும் சம்பவங்கள் தற்போது ஒவ்வொன்றாக அரங்கேறத் தொடங்கி உள்ளன.

அதற்கு சாட்சியாகத்தான், இபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் தரப்பினர் மீது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது, தற்போது காவல் நிலையம் வரை சென்று வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது, கடந்த 18 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் தீர்மானங்கள குறித்து ஆலோசனை செய்யவது தொடர்பாக இருந்த நிலையில், அங்கு, ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் என்று இரு தரப்பிலிருந்தும் அங்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.

அப்போது, அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அந்த நேரத்தில், ஜெயக்குமாருடன் வந்த பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் 59 வயதான மாரிமுத்துவை, அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த சில கட்சி நிர்வாகிகள் “நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா?” என்று, அதிரடியாக ஆபாசமாக பேசிய சிலர் அடுத்த கனமே ஜெயக்குமார் ஆதரவாளரின் வாயில் குத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மாரிமுத்து மற்றும் அவரது மகன் முகில் ராஜ் ஆகியோர் எறுக்கஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மாரிமுத்துவிற்கு உதட்டில் இருந்து ரத்தம் வந்த நிலையில், இது தொடர்பாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உள்நோயாளியாகவும் அவர் அப்போது அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடித்து கடந்த 25 ஆம் தேதி ராயபேட்டை காவல் நிலையம் வந்த மாரிமுத்து, தான் தாக்கப்பட்டது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இன்னும் சிலர் மீது மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.