இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருது 

இந்தியாவின் 52-வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.  இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்படும்.

இந்த திருவிழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படும். சிறந்த திரைப்படம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும்.

இந்நிலையில் இந்தியாவின் 52-வது சர்வதேச திரைப்பட திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான விருதை உத்தரப்பிரதேச அரசுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கோவா பிரமோத் சாவந்த் ஆகியோர் வழங்கினர். அந்த விருதை உத்தரப்பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் நவநீத் சேகல் மாநில அரசு சார்பில் பெற்றுக்கொண்டார்.  

Goa film festival 52

உத்தரப்பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் நவநீத் சேகல் கூறுகையில், "முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின் கீழ் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகம், மாநிலத்தில் திரைப்படம் தயாரிப்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் விமான நிலையத்திற்கு அருகில் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஃபிலிம் சிட்டியில்  ப்ரீ புரொடக்‌ஷன், போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் ஷூட்டிங் போன்ற அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபிலிம் சிட்டியில் ரூ.10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும்" இவ்வாறு சேகல் நிகழ்ச்சியில் கூறினார்.

இதற்கிடையில் கோவாவில் நடைபெற்று வந்த 52-வது சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற BRICS திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

goa film festival

சமீபத்தில் டெல்லியில் நடந்த 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'அசுரன்' படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். இப்படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவுடன் முதன்முறையாக ‘பிரிக்ஸ்’ 6-வது திரைப்பட விழாவும் நடைபெற்றது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ‘அசுரன்’ படத்துக்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் BRICS திரைப்பட விழா இந்த முறை முதல் முறையாக கோவா சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் தேர்வாகி இருப்பது அவரது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.