தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. வி ஹவுஸ் ப்ரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது

இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிலம்பரசன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல படத்திலும் சிலம்பரசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படத்தில் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் U.R.ஜமீல் எழுதி இயக்கத்தில் ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக மஹா திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மஹா படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், மஹா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 29)  மாலை 5  மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.