உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில், பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சருக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி முற்றி வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவுடன், அஜய் மிஸ்ரா சந்தித்துப் பேசி வருகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள சக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அங்கு ஏற்பட்ட கலவரத்தில் மொத்தம் 9 பேரை வரை உயிரிழந்தனர். இதற்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாகத் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

முக்கியமாக, விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, அப்போது உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது, நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மிகப் பெரிய கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகள் மீது ஆஷிஷ் மிஸ்ரா துப்பாக்கியால் சுட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன், இந்த கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட மொத்தம் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள உபி அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்து வருகிறது. எனினும், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரிலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இப்படியாக, நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக மிக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு மிக கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. 

இதனால், அஜய் மிஸ்ராவை விசாரணைக்கு அழைக்க உத்தரப் பிரதேச போலீசார் தற்போது முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படியாக, மத்திய அமைச்சரின் மகன் கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலையில், மத்திய இணையமைச்சராக உள்ள அஜய் மிஸ்ரா பதவி விலகுவாரா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சற்று முன்பாக சந்தித்துப் பேசினார்.

குறிப்பாக, லக்கிம்பூர் கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால், இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார் என்றும், கூறப்படுகிறது. 

மேலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சரை பதவி விலகி வலியுறுத்தி வருவதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அஜய் மிஸ்ரா சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.