விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் இன்னும் கைது செய்யப்பாடத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நேற்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பாஜகவினர் நடத்திய வாகன அணிவகுப்பில் மத்திய அமைச்சரின் மகன், தனது காரை போராட்டக்காரர்கள் மீது ஏற்றி இறக்கியதால், சம்பவ இடத்தில் 4 பேரும், இதனையடுத்து அங்கு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர், அதன் பிறகு ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த போலீசாருடன் ஏற்பட்ட மோதலிலும், மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி சென்றதிலும் பல விவசாயிகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவமானது, உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது, உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டு, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். 

அதன் தொடர்ச்சியாக, உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்ட அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் கைது செய்தனர். 

இந்த கலவரத்திற்கு காரணமான பாஜகவை “இது, காட்டுமிராண்டித்தனம்” என்று, பல்வேறு எதிர்க்கட்சிகளும் மிக கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வந்தன.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை “விவசாயிகள் மீது கார் ஏற்றியவரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?” என்று, பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி டிவிட்டர் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆனால், இந்த கவலரம் தொடர்பாக பதில் அளித்து பேசிய மீரட் காவல் கண்காணிப்பாளர் வினீத் பட்னாகர், “லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்ட காவல் துறையினருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன என்றும், இதைத் தொடர்ந்து சுமார் 18 பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், தெரிவித்தார்.

குறிப்பாக, மற்றொரு டிவிட்டர் பதிவில், விவசாயிகள் மீது கார் ஏற்ப்பட்டு கொல்லப்பட்ட வீடியோவை காட்டி, “இந்த வீடியோவைப் பார்த்தீர்களா பிரதமரே.. உங்கள் அரசில் இடம் பெற்ற மத்திய அமைச்சரின் மகன் எவ்வாறு விவசாயிகளை காரில் மோதி கொல்கிறார் பார்த்தீர்களா? இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்து, இந்த அமைச்சரை ஏன் இதுவரை நீங்கள் நீக்கவில்லை? அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்குங்கள்” என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது உத்தரப் பிரதேசம் ஹர்கான் காவல் நிலையத்தில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, “இந்த விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்” என்று, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.