மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பையில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியான டார்டியோ பகுதியில் 20 மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று காலை சுமார் 7.30 மணியளவில் அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவெள எரிந்த தீ மற்ற தளங்களுக்கு பரவியது.

இந்நிலையில் லெவெல் 3 எனப்படும் மிகப்பெரிய அளவிலான தீ விபத்து இது என்பதால் மும்பை தீயணைப்பு படை சார்பாக தீயை அணைப்பதற்காகப் பதிமூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தீ விபத்தில் சிக்கியவர்கள் 5 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடன் இருவர் இறந்து விட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர் மற்ற 20 உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர்களும் மரணமடைந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  காயம் அடைந்த நபர்கள் பாட்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மற்றவர்கள் பொதுவார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்தால் கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருந்தபோதிலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தீ விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே, தீயை அணைக்கும் பணிகளும் கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தான் அந்த பணிகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் இணைந்து சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என அவர் ட்வீட் செய்துள்ளார்.

கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் மின் குழாயில் இருந்து வெளியேறிய புகை பல தளங்களுக்கும் பரவியதால் இந்த விபத்து நேரிட்டதாகவும், புகையை உள்ளிழுத்து மயக்கமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர் . அதே நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தீ தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முறையாக வேலை செய்யவில்லை என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.