தமிழ் சினிமாவில் இதையமைப்பாளராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி தற்போது நடிகர் தயாரிப்பாளர் படத்தொகுப்பாளர் என கலக்கி வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து அக்னிச்சிறகுகள் என விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கொலை படத்திலும் நடித்து வருகிறார்.  இதனிடையே தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் உடன் இணைந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் ரத்தம்.

பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமாக தயாராகி வரும் ரத்தம் திரைப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கிறது.  சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்ல உள்ளனர். ரத்தம் படத்தின் 30% காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடையும் போது மொத்த படத்தின் 80 % படப்பிடிப்பு நிறைவடையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தின் கதாநாயகிகள் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. நடிகைகள் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகிய மூவரும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.