“ஓமைக்ரான் பிஏ.2 என்கிற புதிய வைரஸ் நோய் தமிழகத்தில் பரவுகிறது” என்று, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்து மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று, பல வகைகளிலும் தொடர்ச்சியாக பரவி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனினும் டெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் தொற்று வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் இந்த சூழலில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று தற்போது அதி வேகமாகப் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி, ஒமைக்ரானின் மாறுபட்ட வகையான கள்ள ஒமைக்ரான் என்று அழைக்கப்படும், இந்த வகையான வைரஸ் தொற்றின் தாக்கமானது தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் சத்தமின்றி பரவிக்கொண்டு இருக்கிறது.

இந்த ஒமைக்ரான் திரிபை பற்றி விளக்கி உள்ள உலக சுகாதார நிறுவனம், “B.1.1.529 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் BA.1, BA.2 மற்றும் BA.3 என்ற 3 முக்கிய உட்பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக” கூறியுள்ளது.

“அந்த வகையில் பார்க்கும் போது, உலக அளவில் அதிகம் பரவிய ஒமைக்ரான் வைரஸ் BA.1 வகையாக உள்ளது என்றும், ஆனால் இப்போது டென்மார்க் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் BA.2 வகையைச் சேர்ந்த கொரோனாவே அதிகம் பரவி வருகிறது என்றும், இது டிசம்பர் மாத்தின் பிற்பகுதியில் இருந்து ஜனவரி மாத்தின் தற்போதைய நடுப்பகுதி வரையிலான 2 வாரங்களில், BA.2 வகை தொற்று 20 சதுவீத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்ந்து உள்ளதாகவும்” டென்மார்க் அரசு கூறியுள்ளது.

அதே போல், “இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் இந்த மாறுபட்ட வைரஸ் வகை வேகமாக பரவி வருவதாகவும்” டென்மார்க் அரசு தற்போது வெளிப்படையாக அறிவித்து உள்ளது.

இது குறித்து பேசி உள்ள மருத்துவ விஞ்ஞானிகள், “இந்த கள்ள ஒமைக்ரானை ஆர்டிபிசிஆர் சோதனை மூலமாக கண்டறிய முடியும் என்றும், அது பயன்படுத்தப்படும் சோதனையைப் பொறுத்து அதன் முடிவுகள் மாறுபடும் என்றும்” தெரிவித்து உள்ளனர்.

மேலும், “இந்த கள்ள வகையான ஒமைக்ரான் அதிகமாகப் பரவி வந்தாலும், அசல் ஒமைக்ரானால் ஏற்படும் பாதிப்பை விட இதனால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை” என்றும், மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

அதே நேரத்தில், “நாம் செலுத்திக்கொண்டு வரும் இந்த கொரோனா தடுப்பூசிகள், இப்படியான கள்ள ஒமைக்ரானுக்கு எதிராகச் செயல்படலாம்” என்றும், அவர்கள் புதிய நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ஆனால், இன்னும் சில மருத்துவ விஞ்ஞானிகள் “இது முற்றிலும் மாறுபட்ட கொரோனா வைரஸ் என்றும், இதனால் உலக சுகாதார அமைப்பு இதனை கவலைக்குரிய வைரஸ் வகையாக அறிவிக்க வேண்டும்” என்றும், கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வகையான வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவி வருவது குறித்து பேசி உள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் ஓமைக்ரான் பிஏ.2 என்ற புதிய கொரோனா திரிபு பரவுகிறது” என்று கூறி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும், “தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்” என்று, குறிப்பிட்டு பேசி உள்ள அவர், “தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் நிச்சயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், நாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அனைவரும் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்படிக்க வேண்டும்” தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.