“தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை!” தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை

“தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை!” தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை - Daily news

“தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை” என்று, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்து உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி லாவண்யாவை, “மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும்” அவர் தற்கொலை செய்துகொண்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விடுதி வார்டன் சகாயமேரியை  கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து “சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ” ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த பிரச்சனையை கையில் எடுத்த பாஜக, பல கட்ட போராட்டங்களையும் கையில் எடுத்தது.

அந்த நேரத்தில் தான், “குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும்” மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது.

அத்துடன், தற்கொலை செய்துகொண்ட “மாணவி லாவண்யாவுக்கு தனிப்பட்ட முறையில் குடும்ப ரீதியில் பிரச்சினை இருக்கலாம் என்றும், அவரது சித்தி சரண்யாயின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம்” என்றும், ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், “மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது” என்றும், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, “எங்கள் மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” என்று, மாணவி லாவணாயாவின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், “மாணவி லாவண்யாவின் பெற்றோர் தரப்பு, தமிழ்நாடு அரசு தரப்பு, தூய இருதய மேல்நிலை பள்ளி தரப்பு உள்பட பல்வேறு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் நடைபெற்று” வந்தது. 

அதன் தொடர்ச்சியாகவே, “மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சாவாமிநாதன், சிபிஐக்கு மாற்றி” அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்தே, மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை, சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், “அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை” என்று, தேசிய குழந்தைகள் நல ஆணையம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

இதன் மூலம், “மாணவி தற்கொலை விவகாரத்தில் திட்டமிட்டு அவதூறு பரப்பி, பாஜகவினரின் செயல்படுவதும் அம்பலமாகி உள்ளதாகவும், மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க” தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.

அத்துடன், “உரிய பதிவின்றி  செயல்பட்டு வரும் பள்ளி விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உரிய பதிவு இன்றி  எத்தனை பள்ளி விடுதிகள் இது போன்று செயல்படுகின்றன என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றும், தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

குறிப்பாக, “பள்ளி மாணவி லாவண்யா  தற்கொலைக்கு மதமாற்றம் காரணம்” என்று, பாஜக குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தற்போது முற்றுப்புள்ளி வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment