“அதிமுக தொண்டர்கள் அனைவரும் இப்போது ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது” என்று, சசிகலா சூளுரைத்து உள்ளார்.

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 

இவற்றுடன், “அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தல் அடுத்த 4 மாதத்தில் நடைபெறும்” என்றும், அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, அதிமுக சட்ட விதிகளில் அதிரடியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று கூடிய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகே, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

அதன் தொடர்ச்சியாக, இந்த பொதுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இதனால், ஏட்டிக்கு போட்டியாக, “எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுக வில் இருந்து நீக்குகிறேன்” ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். 

இதன் காரணமாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துவிட்டு, அந்த பகுதியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளதால், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் சற்று முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது” என்று, உணர்ச்சிவசப்பட்டார். 

“அதிமுக தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால், அது நிலைக்காது என்றும், பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது என்றும், அவை சட்டப்படி செல்லாது” என்றும், ஆவேசமாக பேசினார்.

மேலும், “நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது என்றும், தற்போது ஒட்டு மொத்த தொண்டர்களின் ஆதரவோடு நிஜத்தை நிச்சயம் அடைவோம்” என்றும், சசிகலா சூளுரைத்தார். 

குறிப்பாக, “ஒன்றரை கோடி தொண்டர்களும், பொது மக்களும் என்னை தான் ஆதரிக்கிறார்கள் என்றும், அதிமுக பொதுக் குழுவில் நிதிநிலை அறிக்கைகளை பொருளாளரே அறிவிக்க முடியும் என்றும், விதிகள் இப்படி இருக்கையில், இன்றைய தினம் நடைபெற்ற பொதுக் குழுவை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றும், சிசகலா அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். 

முக்கியமாக, “இன்றைய தினம் அதிமுக பொதுக் குழு நடந்ததே செல்லாது” என்றும், சசிகலா அதிரடியாக பேசினார். சசிகலாவின் இந்த பேச்சு, அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.