ராகுல்காந்தி ஏன் தமிழ் மனங்களைக் கவர்கிறார்?

ராகுல்காந்தி ஏன் தமிழ் மனங்களைக் கவர்கிறார்? - Daily news

கோவையில் நடந்த இந்தியா கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த ராகுல்காந்தி, பேசத் தொடங்கும்போது என்னுடைய அண்ணன் ஸ்டாலின் என்று கூறத் தொடங்கியவர் ஒரு கணம் நிறுத்தி, வேறு எந்த அரசியல்வாதியையும் நான் சகோதரர் என்று அழைப்பதில்லை என்றார். 

பிறகு பொதுக் கூட்டம் முடிந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆரத்தழுவிய ராகுல், ஒரு இனிப்புப் பாக்கெட்டை ‘அண்ணன்’ ஸ்டாலின் கையில் வழங்கினார். 

இரண்டு தலைவர்களின் முகங்களிலும் உணர்ச்சிப் பிரவாகம். 

கூட்டத்துக்கு வரும் வழியில் கோவையில் ஓர் இடத்தில் தனது காரை நிறுத்தச் சொன்ன ராகுல்காந்தி, சாலை நடுவில் உள்ள தடுப்பைத் தாண்டி, சாலையின் மறுபுறத்தில் உள்ள ஒரு பலகாரக் கடைக்குச் சென்று இனிப்பு வாங்குவது முதல், அதை மேடையில் முதல்வர் ஸ்டாலினிடம் தரும் வரையிலான காட்சிகளைப் படமாக்கித் தொகுத்து அழகான, உணர்ச்சி ததும்பும் வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. 

பலகாரக் கடையில் இனிப்பு வாங்கும் ராகுலிடம், யாரோ ஒருவர் கேட்கிறார்: ‘யாருக்காக இனிப்பு வாங்குகிறீர்கள்?’. உடனே ராகுலிடம் இருந்து பதில் வருகிறது: ‘என் சகோதரர் ஸ்டாலினுக்கு’. 

இயல்பாகப் படமாக்கப்பட்ட இந்த காட்சிகள், உணர்ச்சி ததும்பும் வீடியோவாக உருவெடுத்து, சமூக ஊடகத்தில் வைரலானது. பல்லாயிரம் முறை பகிரப்பட்டு, கோடிக்கும் மேற்பட்டவர்களால் இது பார்க்கப்பட்டது. 

எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்ட இழைகள் பலவற்றில் பின்னூட்டம் இட்டவர்கள் பலர் இந்த வீடியோவைப் பார்த்து கண்கள் கலங்கியதாக குறிப்பிட்டார்கள். ஆனந்தக் கண்ணீர்தான் அது. 

அரசியல் கூட்டணிகள் இணைவதும், பிரிவதும் அன்றாடக் காட்சிகள் ஆகிவிட்டன. நேற்றிரவுவரை ஒரு முகாமில் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு கட்சி, விடிந்து பார்த்தால் அதன் நேரெதிர் முகாமில் ஐக்கியமாகி தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்துப் போட்டு கேமிரா முன்னாள் சிரிக்கும் காட்சிகள் எல்லாம் சகஜமாகிவிட்டன. 

நிரந்தரமற்ற இது மாதிரியான அரசியல் சூழ்நிலையில் எப்படி மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி என்ற இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கிடையில் இப்படி ஓர் உணர்ச்சிபூர்வமான நட்பு, சகோதரப் பாசம் ஏற்பட்டது? அதை ஏன் தமிழ்நாட்டு மக்களும் உணர்ச்சிபூர்வமாக வரவேற்கிறார்கள்?

முதலில் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்காக சேர்வது, சில்லறை ஏமாற்றங்களுக்காக உடைவது என்ற சராசரிக் கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி இல்லை. 

தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று நான்கு பொதுத் தேர்தல்களைக் கண்ட உறுதியான கூட்டணியாக, அரசியல் கொள்கைகளின் நிமித்தம் சேர்ந்த கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகியவையும்கூட நீண்டகாலமாக அரசியல் உறுதியோடு இணைந்திருக்கிற கட்சிகள்தான். கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களில் ஒரு முறைகூட இந்தக் கட்சிகளில் எவையும் கூட்டணியைவிட்டு வெளியேறுவது தொடர்பாக முணுமுணுக்கக்கூட இல்லை. 

ராகுல் காந்தி நேசிக்கப்படுவதற்கு இது மட்டும்தான் காரணமா? 

இல்லை. 

எமெர்ஜென்சி, 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது, இந்தித் திணிப்பு, மாநில சுயாட்சியை மறுப்பது என்று அகில இந்தியக் கட்சிகள் தொடர்பில் தமிழ்நாட்டில் எப்போதும் ஓர் ஒவ்வாமை இருக்கும். 

காங்கிரசின் முன்னிலைப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்த உறுத்தலான பிரச்சனைகளில், ராகுல் காந்தியிடம் மாற்றுப் பார்வைகள் வெளிப்படத் தொடங்கின. தேசிய அரசியல் களத்தில், இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் மாற்றுப் பார்வைகள் கொண்ட ஒரே தலைவராக ராகுல் உருவாகத் தொடங்கினார். 

கூட்டாட்சியே இந்தியாவின் ஜீவனாக இருக்கிறது என்னும் பொருள்பட நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில் அவர் தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்தார். 

‘வாழ்நாளில் ஒருபோதும் உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஆளவே முடியாது’ என்று பிரதமர் மோடியிடம் சவால்விட்டார். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தானே தவிர இது மன்னராட்சி இல்லை. தமிழ்நாட்டை அடக்கி ஆள முயற்சித்தால் அது தோல்வியில் முடியும் என்று பேசிய அவர், நான் தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரனிடம் போய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பேன். அவர் தனக்கு இதுதான் வேண்டும் என்று கூறுவார். பதிலுக்கு அவர் என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். நான் எனக்கு என்ன வேண்டும் என்று சொல்வேன். இதன் பொருள் இது மாநிலங்களின் ஒன்றியம், இதன் பொருள், இது உரையாடலால், பேச்சுவார்த்தையில் கட்டப்பட்டதாகும் என்பது ஆகும் என்று கூறினார்.

அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் இதயத்தில் தமிழ்நாடு பற்றிய, தமிழ் மொழி பற்றிய ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு இந்தியா குறித்த கருத்தையும் வைத்திருக்கிறார்கள் என்று கூறினார் ராகுல்காந்தி. 

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வரும் வழியில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது ‘நான் ஓர் தமிழன்’ என்று உணர்ச்சிபூர்வமாக பதில் சொன்னார் ராகுல்காந்தி. 

ஓட்டுக்காக அவர் இப்படிப் பேசியதாக கூற முடியாது. ஏனென்றால், இப்படிப் பேசி அவர் தன்னை தமிழ் அடையாளத்தோடு இணைத்துக் கொண்டால், வட நாட்டில் அவர் அந்நியமாக கூடிய ஆபத்து இருக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல்தான் அவர் அப்படிப் பேசினார். 

வேறொரு பேட்டியில் அவரிடம் எமெர்ஜென்சி குறித்து கேட்டபோது தனது பாட்டியான இந்திராகாந்தி எமெர்ஜென்சி கொண்டுவந்தது தவறு என்று துணிச்சலாகவும், திறந்த மனதோடும் கருத்து சொன்னார். 

முதல்வர் ஸ்டாலினை கட்டித் தழுவி இனிப்பு வழங்கிய அந்த பிரசாரக் கூட்டத்தில்கூட ராகுல் காந்தி, “உங்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது, பண்பாடு இருக்கிறது” என்று கூறியதோடு, உங்கள் மாநிலத்தில் கல்வி முறை எப்படி இருக்கவேண்டும், தேர்வு எப்படி நடக்கவேண்டும் என்பதெல்லாம் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் என்று கூறினார். 

தமிழ்நாடு என்றே கூறக்கூடாது, தமிழகம் என்றுதான் சொல்லவேண்டும் என்றும், ஒரு மாநிலம் மட்டும் வளரக்கூடாது என்றும் தமிழ்நாட்டுக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிவரும் வேளையில், மாநில சுயாட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக அரசால் நசுக்கப்படும் நிலையில் ராகுல் காந்தி மாநில உரிமைகளை மதிக்கும் வகையில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் திறந்த மனதோடு பேசிவருகிறார். 

அது மட்டுமல்ல, அவர் பேசுவதுபோல இதுவரை எந்த அகில இந்தியத் தலைவரும் மாநில சுயாட்சி குறித்தோ, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது குறித்தோ, தமிழ்நாட்டு மக்களின் உணர்வு குறித்தோ பேசியது இல்லை. இதனால்தான், தமிழ்நாட்டு மக்களும் அவரை உணர்வுபூர்வமாக நேசிக்கிறார்கள். 

இப்படி கொள்கையாலும், இதயபூர்வமாகவும் ஒருமித்த உணர்வு உள்ள தலைவர்களாக மு.க.ஸ்டாலினும், ராகுகுல் காந்தியும் திகழ்கிறார்கள். இந்த நட்பை, கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் நேசிக்கிறார்கள்.

Leave a Comment