அமெரிக்காவில் சுழன்றடித்த தொடர்ச்சியான சூறாவளியில் சிக்கி கிட்டதட்ட 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சூறாவளியால் 2.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் மிக கடுமையான சூறாவளி புயல் தாக்கி உள்ளது. 

இந்த சூறாவளி புயலால், அந்த நாட்டில் உள்ள பல உயரமான கட்டடங்கள் இடிந்து விழுந்த, தலைமட்டமாகி உள்ளன. 

முக்கியமாக, அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் கூறைகள் புயல் காற்றில் மேலே பறந்து உள்ளன. 

குறிப்பாக, அமெரிக்காவின் கென்டகி, ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ் உள்பட சில மாகாணங்களில் 30 சூறாவளி புயல்கள் அடுத்தடுத்து வந்து மிக கடுமையாக தாக்கி உள்ளன. 

இதில், அந்நாட்டில் உள்ள 6 மாகாணங்களில் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள ஏராளமான கட்டடங்கள், தொழிற்சாலைகள், உள்ளிட்டவை முற்றிலுமாக உருகுலைந்து போய் உள்ளன. அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து, வெட்ட வெளியாகி காட்சி அளிக்கின்றன.

இந்த தொடர்ச்சியான சூறாவளி புயலில் கிட்டதட்ட 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புயல் தாக்கம், அமெரிக்க வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் மிக மோசமான சூறாவளியாக பல வகையிலும் சேதங்களை ஏற்படுத்திய சூறாவளியாக பார்க்கப்படுகிறது.

அத்துடன், சூறாவளியால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தற்போது போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சூறாவளி காற்று காரணமாக அமெரிக்காவின் மேபீல்டு நகரத்தில் அவசர நிலை தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இதே போன்று, இல்லினாய்சில் மாகாணத்தில் உள்ள அமேசான் குடோனை சூறாவளி தாக்கியதாகவும், அங்கு 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

அதே போல், அங்குள்ள அர்கன்சாஸில் மருத்துவனை கூரை இடிந்து விழுந்ததில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த சூறாவளியால் அந்நாட்டில் மொத்தம் 2.5 கோடி பேர் அச்சுறுத்தலான சூழலில் உள்ளதாகவும், மேலும் அந்நாட்டில் உள்ள 3,31,549 பேர் மின் இணைப்பு இன்றி தவித்து வருகின்றனர் என்றும், கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய தொடர் சூறாவளியில் இதுவும் ஒன்று” என்று, குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், கடும் பாதிப்பை சந்தித்துள்ள கென்டகியில் அவசர நிலையை அமல்படுத்தியதுடன், மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான கென்டகிக்கு நிதியை விடுவிப்பதற்காக, கூட்டாட்சி அவசரகால பேரிடர் பிரகடனத்தில் பிடென் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.