குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளான செய்தியை டி.வி.யில் பார்த்து, அந்த ஹெலிகாப்டரை இயக்கிய தலைமை பைலட்டின் தாய் மயங்கி விழுந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் பனிமூட்டம் காரணமாக நேற்று விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்தது.  இந்த கோர விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மிதுலிகா உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஹெலிகாப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டுமே 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பி.எஸ். சவுகான்  இறந்த செய்தி கேட்டு அவரது தாய் மயங்கி விழுந்த துயர சம்பவம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

PS CHAUHAN HELICOPTER CRASH LAST CONVERSATION

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற  எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் தான் பி.எஸ். சவுகான். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்த இவர், தனது தாயார் சுசிலா சவுகானுடன் கடைசியாக, விபத்து நடந்த முந்தைய நாள் இரவு தொலைபேசியில் உரையாடி உள்ளார். 

ஆனால் அதுவே தனது குடும்பத்தினருடனான அவருடைய கடைசி உரையாடலாக மாறி உள்ளது நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. தனது மகனுடன் பேசும் கடைசி உரையாடல் அதுதான் என்பதை அப்போது தாய் சுசிலா சவுகான் அறிந்திருக்கவில்லை. மறுநாள் மதியம் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து பி.எஸ்.சவுகான் ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. 

தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த செய்தியை, பி.எஸ். சவுகானின் மாமனார் தொலைபேசி மூலம் சவுகானின் தாயிடம் தெரிவித்து டி.வி.யை பார்க்குமாறு கூறியிருக்கிறார். டி.வி.யை பார்த்த தாய் சுசிலா சவுகான், தனது மகன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற ரீதியில் இருந்த காட்சிகளை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் மயங்கி விழுந்துள்ளார்.

பி.எஸ். சவுகானின் தாயார் சுசீலா, விபத்து நடந்த முந்தைய நாளில், தனது மகனுடன் தொலைபேசியில் உரையாடியதை நினைவு கூர்ந்துள்ளார். தனது குடும்பத்தில் பி.எஸ்.சவுகான் தான் கடைசி மகன் ஆவார். பி.எஸ். சவுகான் அனைவருடனும் அன்பாக பழகக்கூடியவர் என்று தாய் சுசிலா சவுகான் தெரிவித்துள்ளார்.

PS CHAUHAN LAST CONVERSATION HELICOPTER CRASH

இந்தக் கோர விபத்தில் உயிரிழந்த விமானப்படை விங் கமாண்டர் பி.எஸ். சவுகான், மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் இருக்கும் சைனிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். கடந்த 2000-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த பி.எஸ். சவுகானுக்கு கடந்த 2007-ம் ஆண்டு  திருமணம் நடந்தது.

பி.எஸ். சவுகான் தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பி.எஸ். சவுகானுக்கு 4 மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். அனைவரிடத்திலும் மிகவும் அன்பாகப் பேசக்கூடிய என் மகன் இறந்ததை டி..வி செய்திகள் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தோம் என சவுகானின் தந்தை சுரேந்திர சிங் சவுகான் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பி.எஸ். சவுகானின் மூத்த சகோதரிகளுள் ஒருவரான மினா சிங் கூறுகையில், “31 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டில் தான் ரக்ஷா பந்தன் தினத்தன்று சகோதரிகள் அனைவரும் என் தம்பியை சந்தித்து அளவளாவினோம். நாங்கள் என்ன கேட்டாலும் எங்களுக்காக கேட்டதை வாங்கி வந்துவிடுவான்” என உணர்ச்சிவசமாக அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் அடுத்த 10 நிமிடங்களில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூரை அடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.