குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இன்று  தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

bipin rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், நேற்று  கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

தொடர்ந்து  அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து  இன்று  காலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய மந்திரிகள், அதிகாரிகள் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது என்ற  தகவலை ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.