இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவனே அல்லது ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நிச்சயமாக நியமிக்கப்படலாம்” என்று, டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் முப்படைகளுக்குமான தலைமை தளபதி பிபின் ராவத், தனது மனைவி உள்பட 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே திடீரென்று வெடித்து சிதறியதில், பிபின் ராவத் பரிதாபமாக உயரிழந்தார்.

முப்படை தலைமை தளபதியின் எதிர்பாராத இந்த திடீர் மரணத்தை அடுத்து, “இந்தியாவின் புதிய தலைமை தளபதி அடுத்து யார்?” என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

அதாவது, இந்தியாவில் ராணுவம், கப்பல் படை, விமானப் படை என்று, முப்படைகளை ஒருங்கிணைக்கும் விதமாக CDS என்கிற முப்படை தலைமை தளபதி என்ற புதியதொரு பதவியை, பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கியது.

அப்போது, ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத், மத்திய அரசு புதிதாக உருவாக்கிய “ராணுவம், கப்பல் படை, விமானப் படை” என்று முப்படைகளுக்கும் தலைமை பொறுப்பை ஏற்றார்.

இந்த புதிய பொறுப்பின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றாலும், பிபின் ராவத்தின் திடீர் உயிரிழப்பானது, “இந்தியாவில் உள்ள 13 லட்சம் பாதுகாப்பு வீரர்களை அடுத்து தலைமை ஏற்று வழி நடத்திச் செல்லப்போவது யார்?” என்கிற பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

அதன் படி, இந்தியாவில் தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும் மனோஜ் முகுந்த் நரவனேவுக்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது. 

அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக முகுந்த் நரவனே பொறுப்பேற்றார். சீனியாரிட்டி அடைப்படையில் இவருக்குத் தான் தற்போது இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.

அதே போல், தற்போதைய விமானப்படை தளபதி விவேக் ராம் சௌத்ரி பதவிக்கு வந்து 2 மாதங்களே ஆவதால், இந்திய கப்பல் படையின் தளபதியாக ஹரி குமார் பதவியேற்று வெறும் 8 நாள்களே ஆவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ராணுவத்தில் முதிர்ந்த அனுபவத்தின் அடிப்படையில் ராணுவத் தளபதியாக இருக்கும் முகுந்த் நரவனேவே, நமது இந்தியாவின் முப்படைகளுக்கும் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, விமானப் படை தளபதியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற ஆர்.கே.எஸ். பதவுரியா பெயரும் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என்கிற பட்டியலில் முன்வைக்கப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம், கடந்த 1980 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்த பதவுரியா, தொடர்ந்து 42 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவையாற்றி சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். இவர், ரஃபேல் போர் விமானங்கள், தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதலில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் அதற்கான காரணமாக கூறப்படுகிறது.

மேலும், ராணுவ தளபதி நரவனே, முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டால், காலியாகும் ராணுவ தளபதி பதிவிக்கு  யோகேஷ் குமார் ஜோஷி அல்லது சந்தி பிரசாத் மோகந்தி ஆகியோர் அந்த பதிவியில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன், ராணுவ துணை தளபதி சாண்டி பிரசாத் தமது கத்தார் பயணத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, நேற்றைய தினம் நாடு திரும்பினார். அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு நாடு திரும்புவதும், தற்போது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது

அதே போல், அப்படி முப்படைகளின் தலைமை தளபதி பொறுக்கு வருபவர்கள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் Department of Military Affairs என்கிற ராணுவ விவகாரங்களுக்கான துறையின் செயலாளராகவும் பதவி வகிப்பார் என்றே கூறப்படுகிறது. 

Chairman Chiefs of Staff Committee-ன் நிரந்தர தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகர் ஆகிய பொறுப்புகளும் முப்படை தலைமை தளபதிக்கு உள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து Department of Military Affairs என்பது அவருக்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த சூழலில் தான், இந்த பதிவியானது மத்திய அரசால் அதுவுமு் அரசியல் தலைமையால் நியமனம் செய்யப்படும் பதவியாகும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர், “ராணுவத்தில் பணியில் இருப்பவர்தான் என்று இல்லை, ராணுவம் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும் செயலாளர் நிலையிலான அதிகாரி கூட இந்த பொறுப்புக்கு நியமிக்கப்படலாம்” என்றும் கூறினார். 

அதன்படி, ராணுவத்தில் பணியாற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரா? அல்லது ராணுவ விவகாரங்களுக்கான பொறுப்பான அதிகாரி ஒருவரா?” என யார் புதிய முப்படைகளின் தலைமை தளபதி என்கிற கேள்வி எழுந்துள்ளன.

இதனிடையே, “முப்படைகளின் அடுத்த தலைமை தளபதி யார்?” என்று, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றதாகவும், அதன்படி, “முப்படை தளபதி தேர்வு முடிவு செய்யட்டு விட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இது பற்றிய முடிவு அறிவிக்கப்படும்” என்றும், டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.