கொரோனா தடுப்பூசி போட மறுத்து மூதாட்டி சாமியாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

corono vaccine

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி 100 சதவீதத்தை எட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையம் தட்சிணாமூர்த்தி நகரில் சுகாதார ஊழியர்கள் ஊசி போடாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். 

இந்நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை செவிலியர், ஆஷா பணியாளர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டோர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் முதியவரும், மூதாட்டியும் ஊசி போடாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் ஊசி போடமாட்டோம் என்று அந்த வயதான தம்பதியினர் அடம்பிடித்தனர். செவிலியர் தடுப்பூசி செலுத்தினால் ஒன்றுமே ஆகாது என்கிறார். உடனே திடீரென அங்கிருந்த மூதாட்டி சாமி வந்து மாரியம்மா, அங்காளம்மா ஆகாதுன்னு சொல்றேன் எனக் கத்துகிறார். ஒருகட்டத்தில் அந்த மூதாட்டி சாமி வந்ததுபோல் ஆட தொடங்கினார். கால்களில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு, தாளாது, இது தாளாது அங்காளம்மா சொல்றா என்று சத்தம் போட்டபடி அந்த மூதாட்டி இது ரங்கசாமிக்கு தெரியாதா? என்றெல்லாம் கூறி சாமியாடினார். 

அதனைத்தொடர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டே சுகாதார ஊழியர்கள் அங்கிருந்து கிளப்பிவிட்டனர். தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக சுகாதரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த சம்பவம் உண்மை தான். மக்களிடம் புரிதல் இல்லை. சுகாதாரத்துறை தான் கஷ்டப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்து, ஒமைக்கரான் வந்தால் புதுச்சேரியை காப்பாற்றுவது கடினமாகிவிடும் என்று தெரிவித்தனர்.