பெண் போலீஸ் ஏட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் 30 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஏட்டாக அங்கு பணியாற்றி வருகிறார்.

பெண் போலீஸ் ஏட்டுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் ஃபேஸ்புக் வாயிலாக தொடர்ந்து சாட்டிங் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில், இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்டு, வாட்ஸ்ஆப்பிலும் சாட்டிங்கை தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த சூழலில், அந்த ஃபேஸ்புக் நபர், தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி, “நீங்களும் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வாருங்கள்” என்று, அந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறான்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, அந்த பெண் போலீஸ் ஏட்டும், சமூக வலைத்தளம் மூலம் பழகிய தனது ஆண் நண்பனில் சகோதரன் பிறந்த நாள் விழாவிற்கு சென்று உள்ளார். 

அப்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, அந்த ஆண் நபர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து, பெண் போலீஸ் ஏட்டை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குறிப்பாக, பெண் போலீஸ் ஏட்டை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த இளைஞர், அதனை வீடியோவாகவும் எடுத்து உள்ளார்.

இந்த செயலுக்கு அந்த இளைஞனின் தாயாரும் உடந்தையாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், “இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் பற்றி வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்று, அந்த பெண் போலீசை அவர்கள் மிரட்டி உள்ளனர். 

முக்கியமாக, இந்த ஆபாச வீடியோவை வைத்து, பெண் போலீஸ் ஏட்டிடம் இருந்து, பணம் பறிக்க அந்த இளைஞனின் தாயார் முயன்றுள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண் போலீஸ், கடந்த 13 ஆம் தேதி தான் பணியாற்றும்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர், சம்மந்தப்பட்ட இளைஞனின் தாயார் உள்பட மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் ஏட்டின் ஆண் நண்பன் மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

மேலும், இந்த குற்றச் செயலில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.