தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை பழி வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இப்படி ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நாயா என்னும் கிராமத்தைச் சேர்ந்த சோனு என்ற இளைஞர், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சோனுக்கு ஒரு சகோதரி உள்ளார். 

சோனுவின் சகோதரி, வீட்டில் இருந்து கடைக்குச் சென்று வரும்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக்  கூறப்படுகிறது. இதனால், அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த பெண், வீட்டிற்கு வந்ததும், தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தனது அண்ணன் சோனுவிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனால், சற்று வேறுமாதிரியாக யோசிந்த்த சோனு, தனது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுக்கவும், அவரை கடுமையாகப் பழிவாங்கவும் திட்டம் போட்டார். அதன் படி, அந்த பெண்ணின் அண்ணன் சோனு, பெண் போல வேஷம் போட்டு நடந்து சென்று, தனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரைச் சந்தித்துப் பேசி உள்ளார்.

அப்போது, “எனது பெயர் சோனியா” எனக்கூறி, அறிமுகம் ஆகியுள்ளார். இவற்றுடன், மேலும் சில ஆசை வார்த்தைகளைப் பெண் வேடத்தில் அவர் பேசி உள்ளார்.

அத்துடன், அந்த நபருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பெண் வேடத்திலேயே சோனு வெளியே சென்று உள்ளார்.

இந்த நிலையில், வெளியே சென்ற இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று தனிமையான இடத்தில் மது அருந்தி உள்ளனர். 

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், திருடர்கள் என நினைத்து சந்தேகத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்று உள்ளனர்.  ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ஆனாலும், பிடிப்பிடியாக கிராம மக்கள் துரத்திச் சென்றதில், அந்த இளைஞர் தப்பித்துச் சென்று விட, பெண் வேடமிட்டிருந்த சோனுவை மட்டும் கிராம மக்கள் மடக்கப் பிடித்து உள்ளனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் அவரை ஒப்படைத்து உள்ளனர்.

இதனையடுத்து, பெண் வேடத்தில் இருந்த சோனுவிடம், தப்பிச் சென்ற இளைஞர் குறித்து போலீசார் விசாரித்து உள்ளனர். 

அப்போது, பெண் வேடத்தில் இருந்த சோனு, “நான் பெண் இல்லை என்றும், எனது தங்கைக்கு அவன் பாலியல் தொந்தரவு கொடுத்தவன் என்றும், அவனுக்குப் பாடம் புகட்டவே நான் பெண் வேடமிட்டு இங்கே வந்தேன்” என்றும், அவர் கூறி உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பித்துச் சென்ற அந்த இளைஞரை, அடுத்த சில மணி நேரத்தில் அந்த பகுதியில் இருந்து கைது செய்தனர்.

இதனிடையே, “தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவனைப் பழி வாங்குவதற்காக அண்ணன் காரன், பெண் வேடமிட்ட வந்த சம்பவம்” அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.