“உத்தரப் பிரதேசத்தில் கலவரம் நடைபெற்ற இடம் போர்க்களமாக காட்சி அளித்ததாகவும், இது திட்டமிட்ட படுகொலையே” என்றும்,  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்து உள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டம் பன்பீர்பூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட பகுதியானது, இந்திய - நேபாள எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.

லகிம்பூர் கெரியிலிருந்து, பன்பீர்பூர் வரை செல்லும் 80 கிலோ மீட்டர் தூர சாலையில், ஒவ்வொரு 10 கிலோ மீட்டர் தொலைவிலும் விவசாயிகள் தடுப்புகள் அமைத்து உள்ளனர். 

அவ்வழியே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பிறகே, தேவைப்பட்டால் மட்டுமே உள்ளே நுழைய விவசாயிகள் அனுமதிக்கின்றனர்.

அதே நேரத்தில், அந்த சாலையில் காவல் துறையில் தரப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் எண்ணிக்கை வெறும் 5 மட்டுமே ஆகும். அவர்கள் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி எவ்வித விசாரணையும் மேற்கொள்வதில்லை.

விவசாயிகளின் மீது ஏற்றப்பட்ட கார் டயரின் தடங்கள் தெள்ளத் தெளிவாகக் கட்சி அளிக்கின்றன. 

அத்துடன், கார்கள் செல்லவேண்டிய சாலைகளை அவைகள் கிடையாது. அவை, வெறும் மண் சாலைகளாகவே காட்சி அளிக்கின்றன.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தப்பியோட முயன்றபோது, விவசாயிகளின் அறுந்த காலணிகளும் அங்குள்ள சகதிகளில் பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றன.

சாலையில் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்த பயன்படுத்திய கொடிகள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன.
 
அத்துடன், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் பாதுகாப்புக்கு உடன் வந்த வாகனங்களில் 2 வாகனங்கள், அங்கு நடந்த கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இரு வாகனங்களும் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அங்கே பார்க்க முடிகிறது. 

இந்த கலவரம் நடந்த போது அதன் அருகே அந்த சாலையை ஒட்டியவாறு ஒரு துணை மின்நிலையம் உட்பட  மொத்தம் 4 கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த கட்டிடத்தில் குடியிருக்கும் விவசாயிகள் பலரும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து உள்ளார். 

நாடு முழுவதும் பெரும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து நேரில் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, “நான் சம்பவத்தன்று மாலை 3.30 மணி அளவில் என் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது விவசாயிகள் கூச்சல் மற்றும் அலறல் சத்தம் கேட்டது. 2 கார்கள் அதி வேகமாக அங்கு தறிகெட்டு ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த கார் செல்லும் வழியெங்கும் இருந்த அனைவரது மீதும் ஈவு இரக்கமின்றி ஏறி இறங்கியது. அப்போது அந்த வழியே பேருந்துகள் ஏதும் வந்திருக்குமாயின், இன்னும் பலர் பலியாகி இருப்பார்கள். 

சம்பவம் நடந்த இந்த குழப்பத்தில், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டது. 2 கார்களில் ஒரு காரிலிருந்து 4 பேர் வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்ததும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். இதனால், நான் பயந்துபோய் வீட்டுக்குள் சென்று விட்டேன். ஆனாலும், தொடர்ந்து அங்கே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

அரை மணி நேரம் கழித்து பிறகு என் வீட்டு வாசலை திறந்து பார்த்த போது, ஒரு நபர் போலீசாரின் உதவியோடு தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அந்த நபர் தான், விவசாயிகளின் மீது 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்” என்று, பதற்றத்துடனும், பரபரப்புடனும் கூறினார்.

இது பற்றி மற்றொருவர் கூறும்போது, “வன்முறை அதிகரித்த போது, 5 போலீஸ்காரர்கள் செய்வதறியாது அவருடைய வீட்டில் பாதுகாப்புக்காகத் தங்கி உள்ளனர். அதில் 2 பேர் பெண் போலீஸ்காரர்கள்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அவர்கள் பயந்து போய் இங்கு வந்து பாதுகாப்பாக இருந்து உள்ளனர். அந்த விவசாயியையும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் நடந்த சாலையின் அருகில் இருந்த துணை மின் நிலையத்தில் 10 பேர் இருந்து உள்ளனர். 

அப்போது, இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த மின்நிலைய அதிகாரி கூறுகையில், “நான் உட்பட என்னுடன் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் 8 பணியாளர்கள் உடனிருந்தனர். நாங்கள் பயத்தால் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தோம். யாரையும் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினோம். துப்பாக்கி சூடு சத்தம் தொடர்ந்து சில மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது”. என்று பதற்றத்துடன் கூறினார்.

ஒட்டுமொத்தமாக 9 பேரை பலி கொண்ட அந்த சம்பவம் நடந்த போது, இந்த இடமே போர்களம் காட்சி அளித்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த நேரில் பார்த்த விவசாயிகள் அந்த மாநில ஊடகங்களில் பேட்டி அளித்து உள்ளனர்.