கடும் எதிர்ப்பையும் தாண்டி, இந்தியாவிலேயே தன்னைத்தானே இளம் பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து என்ற பெண், அங்குள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி படித்துவிட்டு, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்த பெண், சக இந்திய பெண்களைப் போலவே, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக தாலி கட்ட மணமகன் மட்டும் இவரது திருமணத்தில் இல்லை. அதற்கு மாறாக, இந்த பெண் தன்னைத் தானே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். 

அதன் படி, இந்த திருமணத்தை வரும் 11 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில், இந்த பெண்ணின் திருமணத்தில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

மேலும், தனது திருமணத்தை ஹசாரியில் உள்ள ஹரிஹரேஷ்வர் மகாதேவ் கோயிலில் விமரிசையாக நடத்தவும், அதன் பிறகு தேனிலவுக்கு கோவாவிற்கு தனியாக செல்ல இருப்பதாகவும், அந்த பெண் கூறியிருந்தார்.

இப்படி, “தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்ள போவதாக” இளம் பெண் அறிவித்த நிலையில், “இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது என்றும், இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறைவதுடன், புனிதமான கோயில்களில் இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன்” என்று, பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் போர்கொடி தூக்கி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய இளம் பெண் ஷாமா பிந்து, “நம் நாட்டில் தன்னைத் தானே நேசிக்கும் நபருக்கு உதாரணமாக நான் இருக்கலாம் என்பதால், நான் இந்த முடிவை எடுத்தேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“மக்கள், தாங்கள் நேசிக்கும் நபரை திருமணம் செய்கின்றனர் என்றும், நான் என்னையே நேசிக்கிறேன் என்பதால் தான் நான் இந்த திருமணம் முடிவுக்கு வந்தேன்” என்றும், அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, 11 ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த திருமணத்திற்கு நடத்தி வைக்க முன்வந்த புரோகிதர், பின் வாங்கினார்.

இதனையடுத்து, 'நான் யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும், இதனால் எனது திருமணம் நடக்குமு் இடத்தை நான் மாற்ற விரும்புகிறேன் என்றும், எனது சோலோகாமி திருமணத்தை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன்” என்றும், ஷாமா பிந்து தனது முடிவை சற்று மாற்றினார்.

இந்த நிலையில் தான், இளம் பெண் ஷாமா பிந்து தான் அறித்த 11 ஆம் தேதிக்கு முன்பாக, அதாவது திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்ததை விட 3 நாட்களுக்கு முன்பாக நேற்றே தனது வீட்டில் வைத்து தன்னைத் தானே அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். 

Kshama Bindu

அதன்படி, “மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா உள்பட அவரது பாரம்பரிய வழக்கபடி சடங்குகள் அனைத்துமு் நடத்தப்பட்டு இருக்கிறது. 

இதையடுத்து, ஷாமா பிந்து தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில், ஷாமா பிந்துவின் நெருங்கிய தோழிகள் மற்றும் அவருடன் பணியாற்றும் நண்பர்கள் என்று, வெறும் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்றும், இந்த திருமண விழா வெறும் 40 நிமிடத்தில் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இந்த திருமணத்துக்கான மந்திரங்கள் டேப் ரெக்கார்ட் மூலம் இசைக்கப்பட்டதாகவும், அந்த பெண் தனது கழுத்தில் மாலை அணிந்து நெற்றியில் குங்குமம் சூடி மணப்பெண்ணாக மாறி, ஷாமா பிந்து தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்படியாகத் தான் இந்த சோலோ திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

Kshama Bindu

இதனிடையே, இந்தியாவில் இந்த முறை சோலோகாமி திருமணம் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக இப்படியான சோலோகாமி திருமணம் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.