“நபிகள் நாயகம் சர்ச்சைக்குறிய விவகாரத்தில், இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்” என்று, அல்கொய்தா அமைப்பு, இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றி ஒரு டிவி விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை மிக கடுமையாக விமரச்னம் செய்திருந்திருந்தார்.

இதனைக் கண்டித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கு இரு தரப்பினருக்கு இடையே கடும் மத மோதல் வெடித்தது. இதனால், அமைதிக்கு பெயர் போன இந்தியா, கலவர பூமியாக மாறிப்போனது. 

அப்போது, எரிகிற தீயில் எண்ணையை ஊற்றும் விதமாக, பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால், தனது டிவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாகவும், இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடித்து கிளம்பியது.

இதனையடுத்து, நுபுர் சர்மாவின் கருத்துக்கு இந்தியா முழுவதும் மிக கடும் கண்டனங்கள் எழத் தொடங்கிய நிலையில், பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியதுடன், இந்தியாவிற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது. இது, இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்துடன், 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி, “இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்” என்று, ஐநாவுக்கு கோரிக்கை வைத்தது. 

இதனால், கடும் அதிரச்சி அடைந்த இந்தியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்தில், “நபிகள் நாயகத்திற்கு எதிரான சர்ச்சையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்றும், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது” என்றும், குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில் தான்,  “நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக, இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்” தீவிரவாத அமைப்பான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடுமையாக இந்தியாவை எச்சரித்து உள்ளது. 

இது குறித்து, 6 ஆம் தேதி பதிவிடப்பட்ட ஒரு கடிதத்தில், “நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்” என்று, எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

அத்துடன், “டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம், குஜராத்தை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்” என்றும், அந்த அந்த கடித்ததில் கூறப்பட்டு உள்ளது. 

இதனால், இந்த கடிதத்தின் பின்னணி குறித்து உளவுத்துறை தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதனால், சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்த குறிப்பிட்ட சிலர் உயிர் பயத்தில் பீதியடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும்” என்று, அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.