பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சையால், ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிநித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரபு நாடுகள் நினைத்தால், இந்தியாவுக்கு பெரும் சிக்கலாகி விடும் என்கிற புள்ளி விபரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. 

பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.வி. விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் நாயகம் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

இவை யாவும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் கொந்தளித்து வெகுண்டு எழுந்தது.

பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியது.

இவற்றுடன், 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி, “இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்” என்று, ஐநாவுக்கு கோரிக்கை வைத்தது. 

இதனால், கடும் அதிரச்சி அடைந்த இந்தியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன.

இதன் காரணமாக, இந்திய - அரபு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் நட்புறவில் மிகப் பெரிய விரிசல் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக முக்கிய இஸ்லாமிய நாடுகளான ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்தியாவுக்குக் தங்களது பகிரங்கமான கண்டனத்தை தெரிவித்து உள்ளன. 

இந்த நிலையில் தான் நமது இந்தியா, இஸ்லாமியா நாடுகளான அரபு நாடுகளை எந்த விஷயங்களில் எல்லாம் சார்ந்து இருக்கிறது என்றும், ஒருவேளை அரபு நாடுகள் தங்களது எதிர்ப்பை வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு காட்ட நினைத்தால் இந்தியாவுக்கு எந்த வகையில் எல்லாம் இழப்புகள் ஏற்படும் என்பதையும் ஒரு முறை பார்த்து விடலாம்.

இந்தியாவும் - இஸ்லாமிய நாடுகளும்

கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட விசயங்களில் இந்தியா, முக்கிய இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளை மட்டுமே இந்தியா நம்பி இருக்க வேண்டி உள்ளது. 

இந்த நிலையில் தான், பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா போன்றவர்களின் இஸ்லாமியர்களுக்கு எதிரான திமிர் தனமான பேச்சுக்கு இந்த இஸ்லாமிய நாடுகள் நடவடிக்கை எடுக்க நினைத்து, சுமார் ஒரு மாதம் மட்டும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தி வைத்தால் போதும், ஒட்டு மொத்த இந்தியாவும் ஸ்தம்பித்து போய், அப்படியே முழுவதுமாக முடங்கிவிடும் பெரும் அபாயம் இருக்கிறது. 

இந்தியர்களின் வேலை வாய்ப்பு

இந்தியர்கள் பலரும், இஸ்லாமிய நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவின் மொத்த 32 மில்லியன் என்.ஆர்.ஐ.களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த அரபு நாடுகளில் தான் தற்போது பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். 

#BJP வின் நுபுர் சர்மா போன்றவர்களின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களுக்காக, இந்த இஸ்லாமிய நாடுகள் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவிற்கு தேவையான எரிபொருள் முற்றிலுமாக தடை செய்யப்படுவதுடன், பல கோடி இந்தியர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் நிலையும், அப்படி அவர்கள் அனைவரும் இந்தியா வந்தால், இவர்கள் அனைவருக்கும் இந்திய அரசால் வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா என்றால், அதுவும் மிகப் பெரிய கேள்விக்குறி தான்.

பண இழப்பு

இதனால், என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு அனுப்பும் பல பில்லியன் டாலர் அளவுக்கு பண இழப்பு இந்தியாவுக்கு ஏற்படும்.

அதே போல், இந்தியா கத்தாரில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன் எல்.என்.ஜி.யை இறக்குமதி செய்கிறது. இதுவும் தடைப்பட்டால், இந்தியாவின் நிலமை இன்னும் மோசமானதாகி விடும்.

ஐக்கிய அரபு நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 43.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ல் 72.9 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. இதையும் இந்தியா இழக்க நேரிடும். 

ஒட்டு தொத்த இந்தியாவும், சமையல் எண்ணெய்க்கு அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகளில் இந்தோனேஷியாவே முக்கியமாக திகழ்கிறது. சமீபத்தில் கூட, இந்தோனேஷியா சில நாட்கள் மட்டுமே பாமாயில் ஏற்றுமதி தடை செய்த போது, இந்தியா எந்த அளவிற்குப் பாதிப்புகளை எதிர்கொண்டது என்பதை நாடே வேடிக்கைப் பார்த்தது.

முன்னதாக, பாஜவின் நுபுர் சர்மா பேச்சுக்கு, உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குவைத் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளில் உள்ள சூப்பர்மார்கெட்டுகள் சிலவற்றில் இந்திய பொருட்களை விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது. 

குறிப்பாக, இந்தியா தனி நாடாக எப்போதும் செயல்பட முடியாது. எண்ணெய்க்கு ஒரு நாடு, ஆயுதத்திற்கு ஒரு நாடு, தொழில் நுட்பத்திற்கு ஒரு நாடு என எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு இஸ்லாமிய நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டத்தில் இந்தியா இருப்பதால், இது போன்ற திமிர் தனமான பேச்சுகள் இல்லாமல், அனைத்து தரப்பினரையும் சரிக்கு சமமாக பாவிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருக்கிறது.