எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள “எடப்பாடி நகராட்சியை” கைப்பற்றி திமுக வரலாற்று சாதனை!

எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள “எடப்பாடி நகராட்சியை” கைப்பற்றி திமுக வரலாற்று சாதனை! - Daily news

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23 வது வார்டில் முதல் முறையாக எடப்பாடி நகராட்சியை கைப்பற்றி, திமுக வரலாற்று சாதனையை படைத்து உள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு முக்கிய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறி வருகிறது.

அதன் படி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள  எடப்பாடி நகராட்சியை முதல் முறையாக திமுக கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்திருப்பது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடியை இந்த தேர்தலில் திமுக கைப்பற்றி உள்ளது. 

கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

இதில், பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகின்றன.

அந்த வகையில், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

அதன்படி அதிமுக, பாஜக உள்பட பிற கட்சிகள் தற்போது வரை அந்த தொகுதிகளில் கடுமையான பின்னடைவை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட எடப்பாடி பழனிசாமியின் சொந்த வீடு அமைந்திருக்கும் அங்குள்ள 23 வது வார்டில், திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் அபார வெற்றி பெற்று உள்ளார். 

குறிப்பாக, எடப்பாடி நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 16 வார்டுகளில் திமுக அமோக வெற்றி பெற்று உள்ளது. 

இதில், 13 வார்டுகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்று உள்ளது. 

இதே போல், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் உள்பட மேற்கு மண்டலத்தில் அதிமுக இது வரை இல்லாத அளவுக்கு படுதோல்வி அடைந்து உள்ளது. இதனால், அந்த மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அத்துடன், கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்ற தந்த அதிமுக, இந்த தேர்தலில்  தற்போது வரலாறு காணாத தோல்வியையும் பெற்றிருக்கிறது. 

அந்த வகையில் பார்க்கும் பொது, முதல் முறையாக எடப்பாடி நகராட்சியினை திமுக முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. 

இதனிடையே, எடப்பாடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக அங்கு வெற்றியை முதன் முறையாக பெற்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றி, அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பயும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் நடந்த தேர்தலில் திமுக 11 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அங்கு, அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ள நிலையில், அங்கும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment