“மேற்கு வங்கத்தில் 4 ஆம் கட்ட வாக்குப் பதிவின்போது கூச் பெஹார் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு இனப்படுகொலை” என்று, அந்த மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசை பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்து வருகிறது. இது வரை அந்த மாநிலத்தில் 4 கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்திருக்கிறது.ஷ

அதே போல், அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திருணமூல் காங்கிரஸ், பாஜக கட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் நடந்து வருகிறது. 

அதன்படி, அந்த மாநில பாஜக தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி, ஹூக்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக அந்த மாநிலத்தில் 4 ஆம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, அங்குள்ள கூச் பெஹாரில் சிதால்குச்சி வாக்குச் சாவடியில் ஏற்பட்ட வன்முறையில், மத்திய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பொது மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இது, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்று, வலியுறுத்தினார். 

“துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியை, நேரில் பார்வையிட உள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பேரணி நடத்த உள்ளதாகவும்”  மம்தா பானர்ஜி கூறினார்.

இந்த நிலையில் தான், வன்முறை நடைபெற்ற பகுதிகளைப் பார்வையிட, அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள 5 ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக அங்குள்ள சிலிகுரியில் நடந்த பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “ஒரு கும்பலைக் கையாள மத்திய படைகளுக்கு தெரியவில்லை” என்று, குறிப்பிட்டார்.

“சிஐஎஸ்எஃப் மக்களிடம் பீதியை உருவாக்கவே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளது என்றும், இது ஒரு இனப்படுகொலை” என்றும், மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“ஒரு கும்பலை கட்டுப்படுத்த சிஐஎஸ்எஃப் பயிற்சி எடுக்கவில்லை என்றும், அவர்கள் எதற்காகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினார்கள்” என்றும், மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

“ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்த நெறிமுறைகள் உள்ளன” என்று தெரிவித்த மம்தா பானர்ஜி, “ஆனால், மக்களிடம் பீதியை உருவாக்கவே அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “சிஐஎஸ்எஃப் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும், இவர்கள் அமைதியாக வரிசையில் நின்றார்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஏழைகள் என்றும், அவர்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினீர்கள்” என்றும், மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நான் சந்திக்கக்கூடத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது என்றும், ஆனால் இந்த இனப்படுகொலைக்கு எங்களுக்கு நீதி வேண்டும்” என்றும், மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசி உள்ளார்.

முன்னதாக, அந்த மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தின் நானூரில் உள்ள சமுதாயக் கூடத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பறிமுதல்செய்யப்பட்ட வெடிகுண்டுகளை, கிராமத்திற்கு வெளியே வெடிகுண்டு நிபுணர்களால் வெடிக்கவைத்துச் செயலிழக்கச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.