போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள படம் வக்கீல் சாப். இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பிங்க் திரைப்படத்தை தமிழில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற டைட்டிலில் ரீமேக் செய்தனர். 

அடுத்ததாக அதே பிங்க் படத்தை வக்கீல் சாப் எனும் டைட்டிலில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். பவர்ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்தியளவில் சுமார் 50 கோடி ரூபாயை முதல் நாள் அன்றே இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பூஸ்ட் தந்துள்ளது. 

வக்கீல் சாப் படத்தின் FDFS கொண்டாட்டம் நேற்று ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் களைகட்டின. பிரபல திரையரங்கு ஒன்றின் ஸ்க்ரீனில் ரசிகர் ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்து, ரத்தத்தால் பவன் கல்யாண் பெயரை எழுதியது திரை ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஹீரோக்களை கடவுளாக பூஜை செய்து சிலை வைப்பது, கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை எல்லாம் தாண்டி இது போல ரத்தத்தால் திரையில் பெயரை எழுதுவது எல்லாம் ரொம்பவே அறிவீனமான செயல் என பலரும் கண்டித்து வருகின்றனர். நடிகர் பவன் கல்யாணும் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் படத்தை பார்த்து சந்தோஷப்படவே திரையரங்குகளுக்கு வருகின்றனர். இப்படி தேவையில்லாத செயல்களை செய்து ஸ்க்ரீனை நாசமாக்கி விட்டால் அப்புறம் எப்படி படம் பார்க்க முடியும். ஆர்வ மிகுதியால், தியேட்டர் கதவுகளை உடைப்பது, ஸ்க்ரீன்களை கிழிப்பது போன்ற பழக்கங்களை இளைஞர்கள் கை விட வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இன்னும் சிலர் கோலிவுட்டில் இதுபோன்ற செயல்கள் ஏதும் இல்லை. திரைக்கு முன் சென்று நடனம், சவுண்ட் என அதோடு முடித்துக்கொள்கின்றனர் என கமெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.