மிரட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, சென்னையில் 2 வது முறையாக புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று சற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.

அந்த வகையில், தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே புதிய கட்டுப்பாடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக விதித்திருந்தது. 

ஆனாலும், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். கிட்டத்தட்ட 6 பேர், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு மீண்டும் சில அதிரடியான நடவடிககைகளை எடுத்து உள்ளது.

அதன் படி, கொரோனாவை ஒழிக்க சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வழிபாட்டுத்தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்து உள்ளது.

அதாவது, வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், அரசு பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. 

அதே போல், வரும் 13 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால், வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனை ஏற்ற தமிழக அரசு, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு செய்ய இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப் படுவதாக கூறியுள்ளது. எனினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும், தெரிவித்து உள்ளது. 

அதே போல், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11 ஆம் தேதியான இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன” என்று, குறிப்பிட்டு உள்ளது. 

அதன்படி, “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் படுகிறது” என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அத்துடன், “புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட, கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது என்றும். அனைத்து காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றும், தமிழக அரசு கூறியுள்ளது. 

இந்த அதிரடியான 2 வது கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தன. அதன் படி, மெரினா கடற்கரைக்கு அதிகாலையில் நடைபயிற்சிக்கு வந்த மக்களை, கொரோனா கட்டுப்பாட்டால் காவல் துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். 

கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினரை தவிர, பொது மக்கள் யாரும் வராமல் இருக்க தடுப்புகள் அமைத்து அதிகாலை முதலே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதே போல், தமிழகத்தில் 846 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து 7 நாட்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் அந்த பகுதியில் அமைக்கப்படும் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.