மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஏப்ரல் 4ந் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதில், சாதாரணமான ஒரு சாமானியன் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் எடுத்துரைத்தது. இப்படத்தில் யோகி பாபு முடித்திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. 

முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக எங்கள் தொழிலை செய்பவர்கள் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. அதுதவிர்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கி வருகிறார்.