“பாலியல் குற்றவாளியே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால், தண்டனை இல்லை என்று, 19 நாடுகளில் சட்டம் இருப்பதாக” ஐநா தெரிவித்து உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் மோஹித் சுபாஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, மோஹித் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, “இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக் கூடாது” என்று, மோஹித் சுபாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று, குற்றவாளியைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பியது, அப்போது இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது, அதனை உண்மை என்று கூறும் வகையில், “தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியே, பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்துகொள்ள 19 நாடுகள் அனுமதிக்கின்றன” என்று,  ஐநா வின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஐநா வின் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியகமான, யு.என்.எஃப்.பி.ஏ என்கிற அமைப்பு, தற்போது வெளியிட்டுள்ள புதிய ஆண்டு அறிக்கையில், “உலகில் உள்ள 19 நாடுகள் பாலியல் பலாத்கார குற்றவாளிகளைத் தண்டனையிலிருந்து தப்பிக்கச் செய்வதற்காக, பாதிக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றன” என்று, அதிர்ச்சி தரும் விசயத்தை அதில், குறிப்பிட்டு இருக்கிறது. 

அதன் படி, அந்த அறிக்கையில் “அல்ஜீரியா, அங்கோலா, பொலிவியா, பஹ்ரைன், கேமரூன், டொமினிகன் குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஈராக், குவைத், பிலிப்பைன்ஸ், லிபியா, ரஷ்ய கூட்டமைப்பு, செர்பியா, சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, டோங்கா, வெனிசுலா” ஆகிய 19 நாடுகளில் தான், இந்த சட்டமாக உள்ளன” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “இந்த குறிப்பிட்ட 19 நாடுகளின் சட்டங்களானது, குற்றத்தின் சுமையை பாதிக்கப்பட்டவருக்கு மாற்றி, குற்றவியல் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்கின்றன” என்றும், கூறப்பட்டு உள்ளதாக ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நடாலியா கனெம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்தில், “இது முற்றிலும் தவறான ஒன்று” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
 
மேலும், “பெண்களைக் கீழ் படிய வைக்கும் ஒரு செயலாக இது அமையும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார். 

அதே போல், இது தொடர்பாக MENA என்கிற அமைப்பின் பிரதிநிதியான திமா டப்பாஸ் பேசும் போது, “இத்தகைய சட்டங்கள், அந்த நாடுகளின் கலாச்சாரத்தையே பிரதிபலிக்கின்றன” என்று, சுட்டிக்காட்டி உள்ளார். 

முக்கியமாக, “பெண்ணின் உடலானது, தன்னிச்சையானது அல்ல என்ற எண்ணம் அந்த கலாச்சாரத்தில் இருந்தது என்றும், பெண்களை குடும்பத்தின் ஒரு சொத்தாகவே பார்க்கிறார்கள்” என்றும், கூறினார். இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.