திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். 

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் விவேக் குறித்த மீம்ஸ் எதுவாக இருந்தாலும், அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பகிரும் பழக்கம் அவரிடம் உண்டு. 

தற்போது நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நடிகர் விவேக் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று கூறியுள்ளார். 

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் விவேக். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார் விவேக். தற்போது பொள்ளாச்சியில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.