நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் தனது 6 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக, அவரை சாகும் வரை தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த சுரேஷ் என்ற நபருக்கும், இவரது மனைவி கற்பகவள்ளி என்ற பெண்ணிற்கும் இடையே, கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

திருமணத்திற்குப் பிறகு, இவர்களது வாழ்க்கை சற்று மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், போக போக இவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கி உள்ளது. 

ஒரு கட்டத்தில் தனது மனைவியின் நடத்தையில் கணவன் சுரேஷ் சந்தேகப்படத் தொடங்கி உள்ளான். இதனால், தனது மனைவியுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்து உள்ளார் என்றும், கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவருடைய மனைவி கரு உற்றார். ஆனால், அவருக்கான சந்தேகம் துளியும் நிற்கவே இல்லை. இப்படியாக தொடர்ச்சியாக கணவன் - மனைவிக்குள் சந்தேகம் ஏற்படவே, தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுக்கொண்டே வந்தது. 

அப்போது, 6 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவி கற்பகவள்ளியை, கணவர் சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார். இதில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது. 

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னமனூர் போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார், தலைமறைவாக இருந்த சுரேஷை தேடி அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

மேலும், இது குறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது நீதிபதி அப்துல் காதர், அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அந்த தீர்ப்பில், குற்றவாளி சுரேசிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவரை சாகும் வரை தூக்கில் போடவும் அதிரடியாக உத்தரவிட்டார். 

இதனையடுத்து, குற்றவாளி சுரேஷ், நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.