நடிகர் விவேக் மறைவு குறித்து கண்ணீரோடு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் வடிவேலு, “என்னால் பேச முடியல” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது 59 வயதில் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடலானது, அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டு உள்ளது. இதனால், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும், தங்களது இறங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் “அஜித் - விஜய்” என்று சொல்வது போன்று, நகைச்சுவையில் “வடிவேலு - விவேக்” என்று, இருவரும் சம பலத்துடன் பெயரும், புகழும் பெற்று வலம் வந்த நிலையில், விவேக்கின் உயிரிழப்பிற்கு தற்போது நடிகர் வடிவேலு, கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து உள்ளது, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் கண்ணீருடன் பேசி உள்ள நடிகர் வடிவேலு, “விவேக்கைப் பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்று, எடுத்ததுமே குறிப்பிட்டு உள்ளார். 

தொடர்ந்து பேசும் வடிவேலு, “என் நண்பன் விவேக், ரொம்ப நல்லவன். உதவுகிற சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரசாரம், மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். ரொம்ப உரிமையாக 'என்னடா வடிவேலு.. என்ன விவேக்கு' என்று அளவுக்கு நாங்கள் பேசிக் கொள்வோம்” என்றும், அவர் நினைவு கூர்ந்து உள்ளார்.

அத்துடன், “விவேக் மாதிரி ஓப்பனாக பேசக் கூடிய ஒரு ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில், அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிகிற மாதிரியே இருக்கும். என்னை விட, எதார்த்தமாக எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது” என்று, கூறிய வடிவேலு, “என்னால் முடியல.. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல.” என்று, கண்ணீர் விட்டார். 

மேலும், “அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா, நான் மதுரையில் தாயாருடன் இருக்கேன். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவேக்கின் குடும்பத்தினர், தைரியமாக இருக்க வேண்டும். விவேக், எங்கும் சென்றுவிடவில்லை. உங்களுடன் தான் இருக்கிறான். மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்” என்று, மிகவும் உருக்கமாக நடிகர் வடிவேலு பேசி உள்ளார்.