சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்த வெளி வாகனத்தில் பிரமாண்ட பேரணியில் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்னும் 2 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை இரவு 7 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது தேர்தல் ஆணையம். எனவே அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். 

அதே நேரத்தில். நேற்று முன் தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். 

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10.45 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக அவர் அலங்கரிக்கப்பட்ட திறந்த வெளி வாகனத்தில் பாண்டி பஜார் நோக்கி பேரணியாகச் சென்று அமித் ஷா ஆதரவு திரட்டினார். 

அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த அமித் ஷாவிற்கு, ஆயிரக்கணக்கான அதிமுக, பாஜக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமித் ஷாவும், தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது மலர்களைத் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் தேனாம்பேட்டை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷாவுடன், வேட்பாளர்கள் குஷ்பு, ஜான் பாண்டியன், சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். 

சாலையின் இரு புறங்களிலும் கட்சிக் கொடிகளைக் கையில் ஏந்திய படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மக்கள் அமித் ஷாவை காண அப்போது கூடினார்கள். 

அப்போது, கூட்டத்தினரிடையே உரையாற்றிய குஷ்பு, “உங்களுடைய எழுச்சியைப் பார்க்கும் போது, நம்முடைய வெற்றி நிச்சயமாகிவிட்டது என்றும்,  திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்றும், சூளுரைத்தார். 

குறிப்பாக, “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்திடவும், தமிழகம் வளர்ச்சி அடைந்திடவும் தாமரைக்கு வாக்களியுங்கள்” என்று, நடிகை குஷ்பு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.